விஜய்யுடன் மோத சீமான் வியூகம்: ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தர்மயுத்தம்’!

விஜய்யுடன் மோத சீமான் வியூகம்: ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தர்மயுத்தம்’!

திரைத்துறையில் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகி, ‘நாம் தமிழர் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் மூலம் தமிழக மக்களிடையே தீவிர கவனம் பெற்றவர் சீமான். திராவிடக் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டையும் கடுமையாக விமர்சிப்பதன் மூலம், நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை இவர் பெற்று வந்தார்.

ஆனால், நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியைத் தொடங்கியதில் இருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. நடுநிலை வாக்குகளை விஜய் தட்டிப் பறிப்பார் என்ற அச்சத்தால்தான் சீமான் தற்போது விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார் எனத் தவெக தரப்பினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் நேரடியாக மோதவிருக்கும் சீமான், அதற்கு முன்னோட்டமாகத் திரையிலேயே மோதத் தயாராகிவிட்டார்.

அரசியல் பிசியிலும் அவ்வப்போது படங்களில் நடித்து வரும் சீமான், ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘தர்மயுத்தம்’ என்ற திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இந்த ‘தர்மயுத்தம்’ திரைப்படம், நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட அரசியல் திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகும் அதே நாளில், 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது! இதன் மூலம், சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே, விஜய்யுடன் திரையரங்கில் மோத சீமான் வியூகம் அமைத்துள்ளார்.

இதற்கு முன், டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘LIK’ திரைப்படத்திலும் சீமான், பிரதீப்பின் அப்பாவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சி ஆரம்பித்தபோது ஆதரவுக் குரல் கொடுத்த சீமான், ஒருகட்டத்தில் அவரைத் தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். தற்போது, அரசியல் மோதல் திரையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதால், தமிழக அரசியல் மற்றும் சினிமா களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது!

Loading