பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி ரூ. 60 கோடி மோசடி செய்ததாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபக் கோத்தாரி தனது புகாரில், 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், ஷில்பா ஷெட்டியும் ராஜ் குந்த்ராவும் இயக்கிய “பெஸ்ட் டீல் டிவி” என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு தன்னை அணுகியதாகவும், முதலீட்டுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வருமானமாக அளிப்பதாகவும், அசல் தொகையைத் திரும்பத் தருவதாகவும் உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார். இதை நம்பி தான் ரூ. 60 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டதாகவும், தனது பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பணத்தை அவர்கள் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இருப்பினும், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இந்த விவகாரம் முற்றிலும் சிவில் இயல்புடையது என்றும், இதில் எந்த குற்றச் செயலும் இல்லை என்றும், தங்கள் ஆடிட்டர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் போலீஸாரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.