‘ஆர்யன்’ படத்திற்கு மகனின் பெயர் வைத்தது ஏன்? காரணம் சொல்லும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘கட்டா குஸ்தி’ போன்ற படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கென தனி வரவேற்பு உள்ளது. அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியைத் தந்துள்ளன. குறிப்பாக, ‘ராட்சசன்’ திரைப்படம் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தியது.

கடைசியாக அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து, தற்போது அவர் ‘ஆர்யன்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ‘ஆர்யன்’ திரைப்படம் வருகிற 31ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான, வாமனன் வரிகளில் ஜிப்ரான் பாடியுள்ள “கொள்ளாதே கொள்ளை அழகாலே” பாடல் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், படம் குறித்து விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், ‘ராட்சசன்’ திரைப்படம் அவருக்கு இந்தியா முழுவதும் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்ததாகவும், ‘கட்டா குஸ்தி’ படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி மேலும் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததாகவும் கூறினார். அதேபோல், ‘ஆர்யன்’ திரைப்படமும் தனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்திற்குத் தன் மகனின் பெயரான ‘ஆர்யன்’ என்பதை வைத்ததாகவும் அந்தப் பேட்டியில் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Loading