திரையரங்குகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல.. 

திரையரங்குகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல.. 

திரையரங்குகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல. அவற்றை பொலிவாக்கி விளம்பரப்படுத்தி மாற்றங்களை உருவாக்க வேண்டியது இன்றைய தேவை என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சினிமா திரையரங்குகள் மகிழ்ச்சியின் பெரும் சொத்து.. மக்களின் தேர்வுகள் ஆயிரம் இருந்தாலும், அதன் உண்மையான மகிழ்ச்சி திரையரங்குகளே…

காதுகள் கலங்குகின்றன சில செய்திகளை அவை கேள்விப்படும்போது. பல திரையரங்குகள் மூடப்பட இருக்கின்றன என்ற ஆசிட் செய்தி சினிமாவை , அதன் வியாபாரத்தை இன்னும் கீழே கொண்டு போய்விடுமோ என்ற அச்சம் பேரச்சமாகிறது.

இந்த நிழல் எத்தனையோ பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. திரையரங்குகள் குறைந்து போவது நல்லதல்ல.. மக்களுக்கான ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கை காலாவதியாக்கிவிடக் கூடாது.

இதில் சினிமாத் துறையினர்… அரசு அந்நிலைக்குத் தள்ளிவிட வழிவகை செய்துவிடக்கூடாது.

ஏற்கெனவே படம் எடுக்கும் பல சின்ன தயாரிப்பாளர்கள் படம் வெளியிடும் நாளில் டிக்கெட்டுகளை வாங்கிய பின்பே திரையிடல் என்ற நிலை போய்க்கொண்டு இருக்கிறது. கமர்சியல் படங்களே ஓடாத காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டும். முன்பைப் போலவே சினிமா மலர்ச்சியடைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடனான பேச்சு வார்த்தையின் மூலம் அரசு மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களும் இணைந்து அவசர தீர்வு காண வேண்டும். புகழ் மிக்க நடிகர்களும் குரல் கொடுக்க வேண்டும்.

திரையரங்குகளை மூடுவது புத்திசாலித்தனமல்ல. அவற்றை பொலிவாக்கி விளம்பரப்படுத்தி மாற்றங்களை உருவாக்க வேண்டியது இன்றைய தேவை.

வணிக ரீதியாக வெற்றி பெறுதல் தாண்டி சினிமாவை.. திரையரங்க அனுபவத்தை மக்கள் தொடர்ச்சியாக நேசிக்க வைக்க வேண்டியது அனைவரின் கடமை. பெருங்கடமை.