அனிமல் படத்தில் செய்வது போல என்னால் படம் எடுக்க முடியாது… ஆர் ஜே பாலாஜி பதில்!

அனிமல் படத்தில் செய்வது போல என்னால் படம் எடுக்க முடியாது… ஆர் ஜே பாலாஜி பதில்!

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன் படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் எனக் கூறி அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் கூறியுள்ளார்.

இந்த படம் பற்றி தற்போது ஆர் ஜே பாலாஜி பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “பெண்களை அடித்து துன்புறுத்துவது நியாயம் என்பது போல படம் எடுத்து ரசிகர்களின் மனதில் சில படங்கள் விஷத்தை விதைக்கின்றன. நான் அனிமல் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அந்த படத்தில் பெண்களை அவமானப்படுத்துவது போல காட்சிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன். இந்த மாதிரி காட்சிகளையும் சிலர் ரசிக்கிறார்கள் என்பதற்காக நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சிகளை வைக்க முடியாது. இதுபோன்ற படங்கள் சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கின்றன” எனக் கூறியுள்ளார்.