இரட்டை வேடம் போடாமல், மக்களுக்கு உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்க்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!

இரட்டை வேடம் போடாமல், மக்களுக்கு உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்க்கு பதிலடி கொடுத்த சரத்குமார்!

தமிழக அரசியல் களத்தில், தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் இடையே வார்த்தைப்போர் தொடங்கியுள்ளது. விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்த சரத்குமார், “விஜய்யின் அரசியல் இரட்டை வேடம் போடுவது போல உள்ளது. மக்களுக்காக என்ன புதுமையான திட்டங்கள் வைத்துள்ளார்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் பார்த்த கூட்டம் பெரியது!”

மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சரத்குமார், விஜய்யின் சமீபத்திய திருச்சி மாநாட்டில் கூடிய கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “என்ன பெரிய திருச்சி கூட்டம்? மதுரைல எனக்கு கூடின கூட்டம் தெரியுமா?” என நேரடியாக விஜய்க்கு சவால் விடுத்தார். மேலும், “1996ஆம் ஆண்டு, சமூக வலைத்தளங்கள் இல்லாத காலகட்டத்திலேயே நான் திரட்டிய கூட்டம் மிகப்பெரியது. கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்வது பெருமைக்குரியதல்ல” என்று கூறினார்.

“திமுகவின் கிளைக் கட்சி போல தவெக!”

விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்து சரத்குமார் கடுமையாக விமர்சித்தார். “விஜய் கொள்கை, கோட்பாடு எதுவும் இல்லாமல், வெறும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே கையில் எடுத்துள்ளார். நீட் தேர்வையும், தேசியக் கல்விக் கொள்கையையும் திமுக எதிர்ப்பதால், விஜய்யும் எதிர்க்கிறார். இது திமுகவின் கிளைக் கட்சி போல செயல்படுவதை காட்டுகிறது,” என்று குற்றம் சாட்டினார்.

“அண்ணா போல் நேர்மையாக இருக்க வேண்டும்!”

“அனைத்து நடிகர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது, கட்சி தொடங்கி, ஆட்சிக்கு வருவோம் என்றுதான் சொல்வார்கள். விஜய்யும் அதையே கூறுகிறார்,” என்று பேசிய சரத்குமார், அண்ணா – விஜய் சீண்டலை மேற்கோள் காட்டி, “ இரட்டை வேடம் போடாமல், மக்களுக்கு உண்மையாக உழைத்தவர் அண்ணா,” என விஜய்க்கு மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

இந்த இரு நடிகர்களின் கருத்து மோதல், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.