2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் திருச்சியில் தொடங்கவுள்ளது. இதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி திருச்சியில் முகாமிட்டிருந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, ஏராளமான தவெக தொண்டர்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஆனந்த் உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக அரசு, எங்கள் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறது” என்று அவர் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
“மக்களிடையே செல்வாக்கை இழந்த ஆளும் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது” என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து எங்கள் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்” என்றும் சாடியுள்ளார்.
விஜய் தனது அறிக்கையில், “திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். புஸ்ஸி ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.