தளபதி விஜய்யின் அரசியல் போர் முழக்கம்: நாகை மண்ணில் திமுகவுக்கு எச்சரிக்கை!

தளபதி விஜய்யின் அரசியல் போர் முழக்கம்: நாகை மண்ணில் திமுகவுக்கு எச்சரிக்கை!

நாகப்பட்டினம்:

விஜய் அவர்களின் அரசியல் பயணம் தற்போது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நாகையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் உண்டாக்கியுள்ளன. திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கிப் பேசிய விஜய்யின் உரை, அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அராஜக அரசியல் வேண்டாம் சார்!” – திமுகவுக்கு தளபதியின் ஆவேச எச்சரிக்கை!

விஜய் தனது பேச்சின் தொடக்கத்தில், நாகப்பட்டினம் மக்களுக்கு வணக்கம் சொல்லி, “மத வேறுபாடு இல்லாத, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் உங்களுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கம்” என்று பெருமிதத்துடன் கூறினார். ஒரு மீனவ நண்பனாக, உழைக்கும் மக்களின் ஊரான நாகையில் இருந்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது, “தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் நாகை இருக்கிறது. ஆனால், இங்கு நவீன வசதிகள் கொண்ட மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. ஏழை மக்கள் வாழும் குடிசைகள் மட்டுமே அதிகமாக உள்ளன. ‘அடுக்குமொழி பேசி, காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம்’. இவர்களது ஆட்சி மக்கள் தவியாய் தவிப்பதற்குப் போதாதா?” என்று திமுக ஆட்சியை கடுமையாக சாடினார்.

“நான் தனி ஆள் இல்ல, மக்கள் சக்தி!” – தடைகளை மீறிப் பேசும் விஜய்!

“இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து மதுரை மாநாட்டில் நான் பேசியது தவறா, குற்றமா?” என்று கேள்வி எழுப்பிய விஜய், “14 வருடங்களுக்கு முன்பு, 2011-ம் ஆண்டு இதே நாகையில் மீனவர்கள் தாக்குதலுக்கு எதிராக நான் பொதுக்கூட்டம் நடத்தினேன். களத்திற்கு வருவது எனக்குப் புதிதல்ல, நான் எப்பவோ வந்துவிட்டேன். முன்னாடி விஜய் மக்கள் இயக்கம், இப்போது த.வெ.க. அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம், அவ்வளவுதான் வித்தியாசம்” என்று தனது நீண்டநாள் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், “கடிதம் எழுதிவிட்டு கப்சிப்-ஆக போகும் கபடநாடக திமுக அல்ல நாங்கள். மற்ற மீனவர்களை இந்திய மீனவர்கள் என்றும், நம் மீனவர்களை தமிழக மீனவர்கள் என்றும் பிரித்துப் பேசும் பாசிச பாஜக அல்ல நாங்கள். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுதான் எங்கள் அஜெண்டா” என்று அவர் சூளுரைத்தார்.

“சி.எம். சார்! வெளிநாட்டு முதலீடா? உங்கள் குடும்ப முதலீடா?” – அனல் பறந்த கேள்வி!

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாகக் கேள்விக் கேட்ட விஜய், “முதலமைச்சரின் முக்கியமான வேலை சொந்த குடும்ப நலனையும், சுயநலத்தையும் பார்த்துக் கொள்வதுதான். மக்கள் குடிநீருக்காக தவிக்கும் போது, காவிரி நீர் கொண்டு வந்தாரா? கடல்சார் கல்லூரி அமைத்தாரா? தொழில் வளர்ச்சிப் பெருக்குனாங்களா?” என்று ஆவேசமாக கேட்டார்.

மேலும், “வெளிநாட்டு முதலீடுகள் வருதாக சி.எம். சார் சிரித்துக்கொண்டே சொல்கிறார். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், அது வெளிநாட்டு முதலீடா, அல்லது உங்கள் குடும்ப முதலீடு வெளிநாட்டிற்குப் போகுதா?” என்று அனல் பறக்கும் கேள்வியை எழுப்பினார்.

“பூச்சாண்டி வேலை வேண்டாம், தேர்தலை சந்திங்க!” – திமுகவுக்கு நேரடி சவால்!

சனிக்கிழமைகளில் தான் பிரச்சாரம் செய்வதற்கான காரணத்தை விளக்கிய விஜய், “சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சனிக்கிழமையை தேர்வு செய்தேன்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். தனது பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

“அரியலூரில் பேசும்போது பவர் கட், திருச்சியில் ஸ்பீக்கர் ஒயர் கட். சி.எம். சார்! ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் வரும்போது இப்படியா செய்வீர்கள்? பேஸ்மென்ட் அதிருமில்ல! நீங்கள் இருவரும் மறைமுக உறவுக்காரர்கள் ஆச்சே” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

“சி.எம். சார்! மிரட்டி பார்க்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை. கொள்கையை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கு இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்று சவால் விடுத்தார்.

“நான் தனி ஆள் இல்லை. மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. இந்த பூச்சாண்டி வேலைகளை விட்டுவிட்டு, தில்லாக, நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள். பார்த்துவிடலாம்!” என்று விஜய் தனது பேச்சை முடித்தார். அவரது பேச்சுக்கு தொண்டர்களிடமிருந்து பலத்த கரவொலி எழுந்தது.

2026-ம் ஆண்டு திமுகவும், த.வெ.க-வும் மோதுவது உறுதி என்பது விஜய்யின் பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.