சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி கட்சி (DMSK) ஒரு இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், நன்கு வளர்ச்சி அடைந்த மற்றும் நிதி பலம் கொண்ட அரசியல் கட்சிகள், புதிய கட்சிகள் வளரவிடாமல் தடுத்து, எதிர்க்கருத்துக்களை ஒடுக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய் தனது கட்சிப் பயணத்தின்போது காவல்துறை விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்த மனுவில், தங்களையும் ஒரு தரப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென தேசிய மக்கள் சக்தி கட்சி கோரியுள்ளது. இதனால் நீதிமன்றத்துக்கு உதவ முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“வளர்ந்து வரும் புதிய கட்சிக்கு, ஆளுங்கட்சி நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல்களை விடுகிறது. ஆளுங்கட்சி அதன் பலத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியின் குரலை நெரித்து, ஜனநாயகத்தைக் குலைக்க முயல்கிறது” என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் விதிக்கப்படும் கடும் நிபந்தனைகள், மற்ற ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு விதிக்கப்படுவதில்லை என்றும், இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான கருத்து வேறுபாட்டை ஒடுக்கும் செயல் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் மற்ற கட்சிகளுக்கும் நடக்கக்கூடும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.