
சமீபத்தில் ரஜினியின் பேச்சு ஆந்திராவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என இணையத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து பெருமையாகப் பேசினார். குறிப்பாகச் சந்திரபாபு தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர். முக்கியமாக ஹைதராபாத் நகரம் தொழில்நுட்ப ஹைடெக் நகராக மாறியதற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணம் மேலும் அவருக்குச் சர்வதேச அரசியலில் நல்ல பிடிப்பு உள்ளது. அவர் ஒரு அரசியல் தீர்க்கதரசியெனப் புகழாரம் சூட்டினார்.
இதற்கு ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, கடுமையான தனது கருத்தைப் பகிர்ந்தார்.அதாவது, “ரஜினிகாந்த் பேச்சைக் கேட்கும்போது சிரிப்பு தான் வருகிறது. ஆந்திரா அரசியல் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது” எனச் சரமாரியாக விமர்சித்திருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு ஆந்திராவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என #Rajinikanthshouldapologizetopeople என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அதேநேரம் ரோஜா சார்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறி #YSRCPApologizesRAJINI என்ற ஹேஸ்டேக்கும் இணையத்தில் வைரலாகியுள்ளது.