முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (ஆகஸ்ட் 26) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
சட்டமா அதிபர் சார்பில், மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பிக்கவுள்ளார். அதேபோல், ரணில் விக்ரமசிங்க சார்பில் சுமார் 300 வழக்கறிஞர்கள் கொண்ட குழு ஆஜராகவுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நீதிமன்ற வளாகத்தில் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொலிசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், பொதுமக்கள் அமைதியைப் பேணுவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஒரு சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துமாறு பொலிஸ் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.