கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தமிழக நடிகர் விஜய் அண்மையில் கச்சத்தீவு குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், “கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்” என நடிகர் விஜய் தெரிவித்த கருத்து, தேர்தல் காலத்தில் அரசியல் தேவைகளுக்காக சொல்லப்பட்டது. இவ்வாறான கருத்துக்களை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துவோம்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எனவும், அதை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.