ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணை! உடல்நலக்குறைவு காரணம் என நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிணை! உடல்நலக்குறைவு காரணம் என நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!

கொழும்பு, ஆகஸ்ட் 26 – அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுப்புலி லங்கபுர உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, ஜூம் செயலி மூலம் மெய்நிகராக நீதிமன்ற விசாரணையில் இணைந்தார்.

விசாரணையின்போது, முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கை அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்ன, ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு இருதயக் குழாய்களில் மூன்று அடைபட்டுள்ளதாகவும், அவர் பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். எனவே, இதனை ஒரு சிறப்புக் காரணியாகக் கருதி, பிணை வழங்குமாறு அவர் நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவ பரிந்துரைகள் தெரிவித்ததால், இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்திருந்தார். ஜூம் செயலி மூலம் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் நேரடிப் பிரசன்னம் இன்றி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அவரது உடல்நிலை காரணமாக முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் பின்னர் மருத்துவ ஆலோசனைப்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:10 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, அதே தினம் பிற்பகல் 3:00 மணியளவில் கோட்டை நீதவான் நிலுப்புலி லங்கபுர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, ஆரம்ப சமர்ப்பணங்களுக்குப் பின்னர் கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக விசாரணைகள் தாமதமானது. பின்னர் விசாரணைகள் மீண்டும் தொடங்கியபோது, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கோட்டை நீதவான், முன்னாள் ஜனாதிபதியை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இலங்கையின் வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, 2023 செப்டெம்பர் மாதம் தனது மனைவி பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குச் சென்றபோது, அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஹவானாவில் நடைபெற்ற G77 மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் லண்டனில் தங்கியிருந்ததாகவும், அவரும் அவரது மனைவி மைத்ரீயும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தனது மனைவியின் பயணச் செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டதாகவும், அரச நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறிவந்தார். இருப்பினும், அவரது தனிப்பட்ட பயணத்திற்கும், அவரது மெய்ப்பாதுகாவலர்களின் செலவிற்கும் அரச பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது.

ஜூலை 2022 இல் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னர், ரணில் விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். செப்டெம்பர் 2024 இல் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.