இலங்கை தனது முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக ஐந்து சாத்தியமான தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 14 முதல் 18, 2025 வரை இலங்கையில் நடைபெற்ற பின்தொடர் ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு ஆய்வு (INIR) பணிக்குழு, 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரிந்துரைகளை இலங்கை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகக் கண்டறிந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட தளங்கள் குறித்த மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. இருப்பினும், அணு உலைகளை கொள்முதல் செய்வதற்கான செயல்முறையைக் கண்காணிக்க ஒரு மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், விரிவான அணுசக்தி சட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் IAEA அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், 2025-2044 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் நீண்டகால எரிசக்தி திட்டமிடலில் அணுசக்தி சேர்க்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையை முழுமையாகக் கார்பன் அற்றதாக்குவதற்கான ஒரு வழியாக அணுசக்தியை இந்தத் திட்டம் கருதுகிறது.
இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், சில சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. 600 மெகாவாட்டிற்கு மேல் உள்ள அணுசக்தி அலகை இலங்கை மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது தொழில்நுட்ப ரீதியாக சவாலாக இருக்கும் என்று INIR குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், மேலாண்மை, மனித வள மேம்பாடு, பங்குதாரர் ஈடுபாடு, கதிரியக்கக் கழிவு மேலாண்மை மற்றும் தொழில்துறை ஈடுபாடு போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறைகளில் உத்திகள் மற்றும் ஆய்வுகளை இறுதி செய்வது தொடர்பான மேலதிக பணிகள் தேவை என்றும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை 2010 ஆம் ஆண்டு முதல் அணுசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளைத் தொடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.