அமெரிக்காவின் மீது முன்வைக்கும் விமர்சனங்களை உக்ரைன் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனை எச்சரித்துள்ளது. உக்ரைன் இல்லாமல் ரஷ்யாவுடன் அமெரிக்கா உக்ரைன் போர் சம்பந்தமான பேச்சு வார்த்தையை நடத்தியதில் இருந்தே உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்குமான பிரச்சனை சூடு பிடித்தது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அமெரிக்காவையும் அதிபர் டிரம்பையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் டிரம்ப் ஆலோசகர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அமெரிக்காவை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அத்தகைய விமர்சனங்களை அவர் கட்டுப்படுத்தவேண்டும்.
மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஸெலென்ஸ்கி கையொப்பமிட வேண்டும்.
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு அந்த ஒப்பந்தம் ஆகும். அதைவிட உக்ரைனுக்கு சிறந்த பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க முடியாது.
இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு உக்ரைன் என்ன பதில் அளிக்கும் என்று தெரியாத நிலையில், அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இருக்கும் பிரச்சனை மட்டும் நீண்டுக் கொண்டே போகிறது என்பது தெளிவாக தெரிகிறது.