உக்ரைன் இத பண்ணிருக்கவே கூடாது – டிரம்ப் அதிருப்தி!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தின. உலகமே உற்று நோக்கியிருந்த இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் கருத்து தெரிவிக்கையில், தங்கள் சம்மதம் இல்லாமல் அமெரிக்கா-ரஷியா மேற்கொள்ளும் உக்ரைன் தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தது.

இந்த கருத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி அடைந்தார். மேலும் அவர் இது குறித்து பேசுகையில், “ உக்ரைனின் இந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது என எனக்குத் தெரியவில்லை. இது முற்றிலும் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்கள் பேச்சு நடத்தி போரை நிறுத்திக் கொள்ள பல வாய்ப்புகள் இருந்தன. அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.” என்று சொன்னார்.

இவை மட்டும் அல்லாது, உக்ரைன் இந்தப் போரைத் தொடங்கியிருக்கவே கூடாது என்றும் போரைத் தடுக்கும் வகையில் ரஷியாவுடன் பேச்சு நடத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பின் இந்த பேச்சுக்கு உக்ரைன் அதிபர், ரஷ்யா கொடுத்துள்ள பொய்யான தகவல்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்ந்து வருவதாக விமர்சித்தார். மேலும், அமெரிக்க அதிபராக பைடன் இருந்தவரையில் உக்ரைனுக்கு நேரடியான ஆதரவை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.