‘என் குழந்தைக்கு அப்பா இவர்தான்’ – சம்மதிக்கிறாரா எலான் மஸ்க் ?

பிரபல எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர் தன் ஐந்து மாத குழந்தைக்கு எலான் மஸ்க்தான் தந்தை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மீது அவ்வபோது சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், இப்போது எலான் மஸ்க்கின் மீது புதிய குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

அதன்படி, 31 வயதான எழுத்தாளர் ஆஷ்லே செயின்ட் கிளேர் என்பவர், தனக்கு பிறந்துள்ள 5 மாதக் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள சமூக வலைதள பதிவில்,‘ ஐந்து மாதங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்றதாகவும், தன் குழந்தைக்கு எலான் மஸ்க் தான் தந்தை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தன் குழந்தையின் பாதுகாப்பு காரணமாக, இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வெளியே சொல்லாமல் இருந்தேன் என்றும், தற்போது இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் கசிய தொடங்கியதால், தற்போது வெளியே சொல்ல முடிவு செய்தேன என்றும் ஆஷ்லே தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பதிவுக்கு எலான் மஸ்க் இதுவரை எந்த ஒரு பதிலையும் தரவில்லை. முன்னதாக, எலான் மஸ்க்கிற்கு இதுவரை மூன்று முறை திருமணம் நடைபெற்றிருப்பதும், அவருக்கு மொத்தம் 12 குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.