கடுப்பில் சீனா; மழுப்பும் அமெரிக்கா. நடந்தது என்ன?

சீனாவின் ஒரு அங்கமாக இருக்கும் தைவானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று தைவானில் உள்ள பிரிவினைவாதிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். ஆனால், சீனா முடியாது என்று கூறியது. இதனால், அமெரிக்கா வரை இந்தப் பிரச்சனை செல்ல, அமெரிக்காவும் தைவான் சீனாவின் ஒரு பகுதி என்றே அறிவித்தது. மேலும், “நாங்கள் தைவான் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை” என்ற சொற்றொடரை அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், திடீரென அந்த பதிவை அமெரிக்கா நீக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை சீனாவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலால் கோபமடைந்திருக்கும் சீன அரசு, “ அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தைவான் சுதந்திரத்தை வலியுறுத்தும் பிரிவினைவாத சக்திகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது” என்று தெரிவித்துள்ளது. அதோடு, அமெரிக்கா தவறுகளை உடனடியாக திருத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதற்கு விளக்கமளித்த அமெரிக்கா இணையதளத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது இப்படியான ஒரு நிகழ்வு நடந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இதுவரை அந்த வாக்கியத்தை மீண்டும் இணையதளத்தில் சேர்க்கும் பணி நடைபெறவில்லை.

இச்செயலை பெய்ஜிங்கின் வெளியுறவுத்துறை கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, இந்த திருத்தம் அமெரிக்காவின் தைவான் குறித்த நிலைப்பாட்டில் “கடுமையான பின்னடைவு” என்று குறிப்பிட்டுள்ளது.