சூடானில் பயங்கரம்; நூற்றுக் கணக்கில் உயிரிழப்பு

சூடானில் கடந்த மூன்று நாட்களில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடானில் அல்-புர்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

கடந்த 2023 ஏப்ரல் 15- ஆம் தேதி ஆரம்பித்த சண்டை இன்னும் ஓயவில்லை. இந்த காலக்கட்டத்தில் 1.5 லட்சத்தில் இருந்து 5.2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பதாகக் ஏற்கனவே தகவல் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சூடான் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200-க்கும் அதிகமானோரை படுகொலை செய்திருப்பதாக உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் குழு அறிவித்துள்ளது.

மேலும் அந்த குழு கூறுகையில், தெற்குப் பகுதியைச் சேர்ந்த அல்-கடாரிஸ், அல்-கேல்வட் ஆகிய கிராமங்களில் ஆர்எஸ்எஃப் படையினரால் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர் என்றும்,
அந்த கிராமங்களில் இருந்து நைல் நதி வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டும், நீரில் மூழ்கியும் பலர் உயிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.