திருச்சி: யார் உண்மையான TVK என்பதை தீர்மானித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மாற்று அரசியலை முன்னெடுக்க வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் அழைக்கப்பட்டுள்ளாரா என்பது சில நாட்களில் தெளிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியைத் தொடங்கிய அவர், அரசியல் செயல்பாடுகளை மெதுவாகவே முன்னெடுத்து வருகிறார். கடந்த அக்டோபரில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய விஜய், பின்னர் பரந்தூரில் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களைச் சந்தித்தார்.
தற்போது நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய், அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை அணுகியுள்ளது. அவர் தவெக-வுக்கு தமிழ்நாட்டில் 15 முதல் 20 சதவீத வாக்குகள் இருக்கும் என்று கூறி அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் தமிழ்நாட்டு அரசியலில் நடிகர் விஜயின் செயல்பாடுகள் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்தை ஆங்கிலத்தில் TVK என்று சுருக்கமாக அழைக்கும் அக்கட்சியினர், இந்த சுருக்கத்தைப் பயன்படுத்துவதற்கு ஆரம்பத்திலேயே தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறையீடும் செய்தார்.
இந்த விவகாரம் குறித்து திருச்சியில் நிருபர்களுடன் பேசிய வேல்முருகன், “தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமான TVK என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தில் முதலில் பதிவு செய்தவர் நான்தான். நடிகர் விஜய் கட்சி தொடங்கி TVK என்று குறிப்பிடத் தொடங்கினார். இதன் பின்னர், யார் உண்மையாக TVK என்ற சுருக்கத்தைப் பயன்படுத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தேர்தல் ஆணையம் இறுதியாக முடிவு எடுத்து அறிவிக்காமல் இருப்பதற்கான பின்னணி படிப்படியாக வெளியாகி வருகிறது. இன்னும் சில தகவல்கள் வெளியாகும் நிலையில் உள்ளன. இதனால், விஜய் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மாற்று அரசியலை வழங்க வந்துள்ளாரா அல்லது மற்றவர்களால் வரவழைக்கப்பட்டுள்ளாரா என்பது சில நாட்களில் தெளிவாகும்” என்று தெரிவித்தார்.