பாகிஸ்தானின் திட்டம்; கடுப்பில் ஆப்கானிஸ்தான்!

பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தான் அகதிகளையும் நாட்டிலிருந்து வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றம் குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஆப்கன் குடியுரிமைப் பெற்று வாழ்பவர்களும்,பதிவுச் சான்றிதழ் மட்டும் பெற்று வாழ்பவர்களும் உண்டு. இது இல்லாமல் சட்டவிரோதமாக வாழ்பவர்களும் உண்டு.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிய குடிமக்கள் மீது கைது, சோதனை போன்ற செயல்முறைகள் நடந்து வருகின்றன. இதனால், பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கன் தூதரகம் மிகவும் கடுப்படைந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அதன் அருகில் உள்ள நகரமான ராவல்பிண்டியிலும் உள்ள ஆப்கானிய குடிமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களை விட்டு வெளியேறி பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர காவல் துறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு முறையான அறிவிப்பும் இல்லாமல் இந்த செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்துக்கு எந்தவொரு முறையான தகவலும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள ஆப்கன் நாட்டவர்களை பல கட்டங்களாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டதாகவும், முதல் கட்டத்தின் கீழ், ஆப்கான் குடிமக்கள் அட்டை (ACC) வைத்திருக்கும் ஆப்கான் நாட்டவர்கள் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் சட்டவிரோத மற்றும் ஆவணமற்ற அகதிகளுடன் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தகவல் வெளியே வந்தது.

இதனால் இப்போது பாகிஸ்தானில் உள்ள ஆப்கானியர்கள் அச்சத்திலும் பதட்டத்திலும் உள்ளார்கள். கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.