“மோடி பிரதமர் அல்ல, பிக்னிக் மந்திரி!” – வைகோ கடும் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை செல்லாதது ஏன் என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார். மேலும், இந்தி திணிப்பு மற்றும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்ப்பதாக அறிவித்தார்.

ராஜ்யசபாவில் இன்று வைகோ பேசியதாவது: “மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், படுகொலைகள் மற்றும் கொடுமைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன முக்கியமான வேலை இருக்கிறது? நரேந்திர மோடி பிரதமர் அல்ல, அவர் ஒரு ‘பிக்னிக் மந்திரி’. ஒவ்வொரு நாடாக செல்கிறார், ஆனால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி அல்லவா?”

இந்த கருத்துக்களை ராஜ்யசபா துணைத் தலைவர் சபை குறிப்பில் இருந்து நீக்க முயன்ற போது, வைகோ கடும் பதிலளித்தார்: “நான் பேசியதில் எந்த அபார்லிமெண்டரி வார்த்தை இருக்கிறது? எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ்! இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வந்தாலும், கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!”

மேலும், வைகோ கூறினார்: “இந்த நாடாளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் உள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி வீச வேண்டும். இந்தக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நான் வைகோ. என்னைப் பேசக் கூடாது என்று சொல்பவர்களுக்கு நான் கேட்கிறேன், நீங்கள் யார்? நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன்; இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.”

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது என்பதையும் வைகோ நினைவுபடுத்தினார். இவ்வாறு ராஜ்யசபாவில் வைகோ தனது ஆவேசமான பேச்சை முடித்தார்.