போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், 6 மாத குழந்தையின் உடலில் ஆவி புகுந்துவிட்டதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பிய பெற்றோர், குழந்தையை தலைகீழாக கட்டி தீக்குண்டத்திற்கு நேராக தொங்கவிட்டனர். இந்த பயங்கரமான சம்பவம் சிவ்புரி மாவட்டத்தின் கொலரஸ் பகுதியில் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு 6 மாதம் வயதான ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அழுதுகொண்டே இருந்ததாக தெரிகிறது.
பொதுவாக குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால், இந்த தம்பதியினர் மூடநம்பிக்கையின் பேரில், தங்கள் கிராமத்தில் உள்ள ராகவீர் என்ற மந்திரவாதியிடம் குழந்தையை அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதி, குழந்தையின் உடலில் ஆவி புகுந்துவிட்டதாகக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், மந்திரவாதியிடம், “ஐயா, எங்களுக்கு இப்போதுதான் இந்த குழந்தை பிறந்தது. எப்படியாவது இந்த ஆவியை வெளியேற்றுங்கள்” என்று கெஞ்சினர். இதையடுத்து, மந்திரவாதி ராகவீர், “கவலைப்படாதீர்கள், இதை எப்படி ஓட்டுவது என்று எனக்குத் தெரியும்” என்று கூறி, அந்த இடத்தில் செங்கற்களை அடுக்கி தீ மூட்டினார். பின்னர், குழந்தையை தலைகீழாக கட்டி, அந்த தீக்குண்டத்திற்கு நேராக தொங்கவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூடநம்பிக்கையின் பேரில் இத்தகைய செயல்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.