அம்பலாங்கொடையில் உள்ள மடம்பே, தேவகொட பகுதியில் சாலையோரம் கைவிடப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தையை அம்பலாங்கொடை பொலிசார் இன்று காலை மீட்டனர்.
ஒரு துணியில் சுற்றப்பட்டு, தோட்டச் சுவர் அருகே விடப்பட்ட குழந்தை பொலிசார் வந்தபோது அழுது கொண்டிருந்தது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி ரேணுகா டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழு, உடனடியாக குழந்தையை பலபிட்டிய அடிப்படை மருத்துவமனையில் அனுமதித்தது. குழந்தை ஆபத்தான நிலையில் இல்லை என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
குழந்தை அதிகாலை நேரத்தில் சாலையோரம் விடப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்காக அம்பலாங்கொடை பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.