வத்தளையில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இலங்கை சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் பெருமளவு சட்டவிரோத போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓமானில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,697 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் 5 கிராம் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு வீடு விநியோகிக்கும் கடல் சரக்கு மூலம் இலங்கை வந்த இந்த பொதி, பலும்மஹார, முதுன்கொடவைச் சேர்ந்த 66 வயதுடைய இலங்கை பெண் ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்தது. களஞ்சியத்தில் வழக்கமான ஆய்வு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, பொதியை விரிவாக பரிசோதனை செய்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பொதியை பெறுவதற்காக வந்த 35 வயதுடைய ஆண் ஒருவரை, மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டவுடன் சுங்க அதிகாரிகள் உடனடியாக கைது செய்தனர். இவர் குறித்த பொதியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் வீதி மதிப்பு சுமார் 68 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.