அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் ஆனதில் எலான் மஸ்க்கிற்கும் பங்கிருக்கிறது. இதனால், எலான் மஸ்க் தனது செல்வாக்கை பல கூட்டாட்சி அமைப்புகளில் விரிவுபடுத்தி வருகிறார். இது டொனால்ட் டிரம்ப் அணியின் மூத்த உதவியாளர்களிடையே சற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டும் அல்லாது எலான் மஸ்க் அவர்களின் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துகள் தேசிய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் மூத்த அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
சமீபத்தில் எலான் மஸ்க் நிறுவிய DOGE அமைப்பு, ஆயிரக்கணக்கான கூட்டாட்சி ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி, அவர்களின் உணர்திறன் தரவுகளை அணுகி, அரசாங்க செயல்பாடுகளை மாற்றியமைக்க முயற்சித்துக் கொண்டு வருகிறது. ஆனால், இது சம்பந்தமான தகவல்கள் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எலான் மஸ்க்குக்கும் வெள்ளை மாளிகையில் உள்ள மூத்த உதவியாளர்களுக்கும் இடையே மேலும் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிளவை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் அணியின் மூத்த உதவியாளர்கள் எலான் மஸ்குடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும், மஸ்க் தனது செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். இதன் காரணமாக வெள்ளை மாளிகையில் சிறிது பிரிவுவாதம் நிகழ்வதாக தெரிகிறது.
இப்படியான விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்தாலும், டிரம்ப் எலான் மஸ்கை தொடர்ந்து ஆதரித்து வருகிறார். எலான் மஸ்க்கின் இந்தப் போக்கு இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால், பல விடயங்களில் சிக்கல் ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.