இலங்கை சென்றாலும் தமிழர்களுக்கு நன்மை ஏதும் இல்லை: ஸ்டாலின் வேதனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இலங்கை பயணம் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பயனும் தரவில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மீனவர் பிரச்சனை தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டும், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கவலையளிக்கிறது என கூறினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடலில் வலை வீசும் போது கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியதாகவும், மோடி இலங்கை சென்ற போது இந்தக் கோரிக்கைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

தற்போது 97 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் இலங்கை காவலில் இருப்பதாகவும், இது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை அரசு தொடர்ந்தாகக் கைது செய்வதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு பலமுறை கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பினும், தமிழக அரசு எப்போதும் மீனவர்களின் பக்கம் நிற்கும் என்று முதலமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 6) பயணத்தை முடித்தார்.

அவர் இலங்கை ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகள் கைச்சாத்தானது.

இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, மோடி “மீனவர் பிரச்சனை குறித்து நாங்கள் விவாதித்தோம். இது மனிதாபிமான அணுகுமுறையுடன் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வந்தோம்” என்று தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி திஸாநாயக்க, இந்திய பிரதமரின் உதவியை வேண்டி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி, இலங்கை 14 இந்திய மீனவர்களை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.