வானிலை ஆய்வு மையம் இன்று நாட்டின் சில மாகாணங்களுக்கு கடும் வெப்பநிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையில், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) அதிகரித்து, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் ‘Caution Level’ (கவனத்துடன் இருக்க வேண்டிய நிலை) எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைக்கு செல்லும் போது, நீண்ட நேரம் வெப்பத்திற்கு உட்பட்டால் களைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தொடர்ச்சியான உடலோட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டால் வெப்பக் கோளாறுகள் (Heat Cramps) ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால், பொதுமக்கள் அதிகமாக நீர் குடித்து, அவ்வப்போது நிழலில் ஓய்வெடுத்து, அதிக உழைப்புடன் கூடிய வெளிப்புற செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதியவர்கள் மற்றும் நோயாளிகளை கவனிக்கவும், சிறிய குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுவிட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தை குறைக்கும் வகையில் இலகுவான மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வெப்பக் குறியீட்டுத் தகவல் வானிலை ஆய்வு மையத்தினால் உலகளாவிய வானிலை கணிப்பு மாதிரி தரவுகளை பயன்படுத்தி கணக்கிடப்பட்டு, அடுத்த நாளுக்கான முன்னறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படுகிறது. இது அதிகபட்ச வெப்பநிலை கணிப்பாக இல்லாமல், மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலையாகக் கருதப்படுகிறது.