47 வருடங்கள் பிறகு மீண்டும் காற்றில் பறக்கும் யாழ்ப்பாணம் – திருச்சி விமானம்!

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 47 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (30) முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பளை சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும், 2019 ஆம் ஆண்டு மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு, சென்னை – யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை செயல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, தற்போது திருச்சி – யாழ்ப்பாணம் இடையே விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையின் கீழ், திருச்சியில் இருந்து மதியம் 1:25 மணிக்கு புறப்படும் விமானம், 2:25 மணிக்கு யாழ்ப்பாணம் பளை விமான நிலையத்தை அடையும். அதேபோல், யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 3:05 மணிக்கு புறப்படும் விமானம், 4:05 மணிக்கு திருச்சியை அடையும்.

இந்த சேவையை IndiGo Airlines இயக்குகிறது.

விமான சேவையின் கட்டணம் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி – யாழ்ப்பாணம் ஒருவழி பயணச் சீட்டு கட்டணம் ரூ.5,900 முதல் ரூ.6,400 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் விமானப் சேவையின் தொடக்க நாளில், முதல் விமானம் 27 பயணிகளுடன் பிற்பகல் 2:02 மணிக்கு பளை விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், 36 பயணிகளுடன் திருச்சி நோக்கி மாலை 3:00 மணிக்கு புறப்பட்டது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை இந்திய துணைத் தூதரக அதிகாரி சாய் முரளி தலைமையிலான குழு கேக் வெட்டி கொண்டாடியது.