யாழ்ப்பாணம் கோவிலுக்கு குறி கேட்க சென்றவர் இளநீர் குடித்து மரணம் – காரணம் என்ன ?

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு குறி கேட்க சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்பாணத்தின் அராலி பகுதியின் மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெசிந்தன்(31). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது உடல்நிலை சரியாக வேண்டும் என்று நினைத்து அராலி மத்திய பகுதியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள பூசாரியிடம் தனது உடல்நிலை எப்போது சரியாகும் சாமி என குறி கேட்டுள்ளார். ஜெசிந்தனுக்கு குறி சொன்ன பூசாரி, அவரது உடல்நிலை சரியாக இளநீர் ஒன்றை கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த ஜெசிந்தர் திடீரென அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவர் உடனடியாக யாழ்பாணத்தில் உள்ள போதனா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உடற்கூராய்வு நடத்தப்பட்டது.

குறி கேட்க வந்தவர் இளநீர் குடித்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்ததில், ஜெசிந்தனுக்கு ஏற்கெனவே நாய் கடித்தது தெரிய வந்தது. அதனால் பாதிக்கப்பட்ட ஜெசிந்தன் குறிகேட்க கோயிலுக்கு வந்துள்ளார். அங்கு இளநீர் கொடுத்ததால் தண்ணீர் ஒவ்வாமையால் ரேபிஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜெசிந்தனை கடித்த நாய், மேலும் சிலரை கடித்துள்ளதால் அவர்களுக்கும் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.