நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் குறுகிய காலத்திற்குள் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் மக்கள் ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிசா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மக்களுக்கு சிறந்த தரமான மற்றும் பயனுள்ள சுகாதார சேவைகளை வழங்குவதே அரசின் குறிக்கோளாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்குவது, மருத்துவமனைகளை ஏற்கத்தக்கவகையில் எளிமையாகவும், நவீனமாகவும் மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
கொழும்புவில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் நடத்திய நிகழ்வில், சுகாதார தகவல் தொழில்நுட்ப அமைப்பை (Health Information Technology System) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும், ஹிஸ்டோபதாலஜி ஆய்வகத்தை மேம்படுத்தியும் அமைச்சர் பேசினார்.
மேலும், அரசு சேவையை முழுமையாக டிஜிட்டலாக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுத்து வருகிறது என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை பெறும் வசதி அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 1.5 இலட்சத்திற்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்களின் தரவுகளை நிர்வகிக்க, ஒருங்கிணைந்த டிஜிட்டல் மருத்துவ பதிவுகள் உருவாக்க, மருந்து விநியோகத்தை தொழில்நுட்பத்தின் மூலம் சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.