அல்-ஜசீரா ஒளிபரப்பிய இலங்கை இனப் படுகொலை காட்சிகள்- கண்டுகொள்ளுமா சர்வதேசம் ?

கொழும்பு, மே 28, 2025: இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்றும் நீதி மற்றும் பதில்களுக்காகக் காத்திருக்கின்றனர். புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இந்த நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது. இது குறித்து அல்-ஜசீரா செய்தி நிறுவனம் விரிவான ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. இது சர்வதேச கவணத்தை ஈர்த்துள்ளது. காணொளியை காண இங்கே அழுத்தவும்.

புதிய அரசாங்கத்தின் கீழ் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:

கடந்த மே 18 ஆம் திகதி, இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுகூடி தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்தனர். இடதுசாரித் தலைவரான அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அவரது புதிய அரசாங்கத்தின் கீழ் முதல் முறையாக இடம்பெற்றன. இது தமிழ்ச் சமூகத்தில் நீதி மற்றும் பதில்களுக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முரண்பட்ட நிலைப்பாடுகள்:

போருக்கு முன்னர் தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளும், தற்போது அரசாங்கத்தின் செயல்பாடுகளும் முரண்பட்டதாகவே உள்ளன. உதாரணமாக, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை, திசாநாயக்க அரசாங்கம் “தவறான கதை” என்று நிராகரித்துள்ளது. போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் “போர் வீரர்கள்” கொண்டாட்டத்திலும் அவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். தனது உரையில், “துயரத்திற்கு எந்த இனமும் இல்லை” என்று கூறி சமரச நிலைப்பாட்டை எடுத்தாலும், அதேசமயம் “வீழ்ந்த இராணுவ வீரர்களுக்கு” அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

தமிழர்களின் கோரிக்கைகள் – நிறைவேற்றப்படுமா?

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும், காணாமல் போனோர், போர் வலயங்களில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற தமிழர்களின் முக்கிய கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

  • பொறுப்புக்கூறல்: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் தீர்மானத்தை திசாநாயக்க அரசாங்கம் முந்தைய அரசாங்கங்களைப் போலவே நிராகரித்துள்ளது. போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட மாட்டாது என தேர்தல் பிரச்சாரத்தின் போது திசாநாயக்க கூறியதும் குறிப்பிடத்தக்கது.
  • நில அபகரிப்பு: இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீளப் பெறுவோம் என்று திசாநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இந்த மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி கையகப்படுத்துவது தொடர்பான அரசாங்க அறிவிப்பு, வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது.
  • 13வது திருத்தம்: தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கும் 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கத்தின் நிலைப்பாடு அடிக்கடி மாறி வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் இருந்தபோதிலும், இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.

நம்பிக்கையும் அச்சமும்:

திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியின் வன்முறைப் பின்னணி குறித்து தமிழ்ச் சமூகம் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுவதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “பேச்சுகள் நிறைய இருக்கின்றன, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எந்த அடித்தளமும் போடப்படவில்லை, எனவே அவர்களை எப்படி நம்ப முடியும்?” என்று போரினால் பாதிக்கப்பட்ட சூரியகுமாரி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.