Pope Francis has double pneumonia: போப் பிரான்ஸிஸ்க்குப் பிரச்சனை; வெளியே வந்த அறிவிப்பு!

கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்ஸிஸ் கடந்த வெள்ளிக்கிழமை மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதால் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து 88 வயதான போப் பிரான்சிஸ்க்கு நிமோனியா பாதிப்பு இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வாடிகன் தெரிவித்தது.

இந்நிலையில் இப்போது வாடிகன் மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, போப் பிரான்சிஸ்க்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள், எக்ஸ்ரே முடிவுகள் உள்ளிட்டவை வந்திருக்கின்றன என்றும், முடிவுகள் அனைத்தும் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதைக் காட்டுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிகன் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ், இறைவனின் நல்லாசியுடன், நாள் முழுவதும் சற்று ஓய்வெடுத்தார், பிரார்த்தனையும் மேற்கொண்டார். அவ்வப்போது புத்தகங்களை வாசித்தார்.

இந்த நேரத்தில் அவருக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் அவருக்காக பிரார்த்தனைகள் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உலகெங்கிலும் சில ஆலயங்களில் அவருக்கான பிரத்யேக வழிபாடு நடைபெற்று வருகிறது.