உக்ரைன் கனிம வளம்; அமெரிக்காவுக்கா ? பிரான்சுக்கா ?

உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரைவு தயாராகி வருவதாக, நாட்டின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி நேற்று (பிப்ரவரி 27) தெரிவித்தார். இதே நேரத்தில், உக்ரைனின் கனிம வளங்களைத் தோண்டியெடுக்க பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஸெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான பொருளாதார ஒப்பந்த வரைவு குறித்து உறுதிப்படுத்தியபோது, “பிரான்ஸின் தேவைகளை முன்னிட்டு இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” என்று குறிப்பிட்டார். இந்த அறிவிப்பை, அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திப்பதற்கு முன்னர் வெளியிட்டார்.

பிரான்ஸ் மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தைகள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பிரான்ஸின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகார்னு, “நாங்கள் உக்ரைனுக்கு வழங்கிய உதவிகளுக்கு பிரதியாக கனிம வளங்களைக் கேட்கவில்லை. மாறாக, வரும் 30 முதல் 40 ஆண்டுகளில் பிரான்ஸின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்குத் தேவைப்படும் மூலப்பொருள்களை மட்டுமே நாங்கள் கோருகிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டால் உக்ரைன் தனது கனிம வளங்களை விற்பனை செய்ய தயாராக உள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்ததாகவும், இதற்காக அமெரிக்காவுடன் மட்டுமல்லாமல் பிரான்ஸுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் லெகார்னு தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தங்கள் உக்ரைனின் பொருளாதார மறுகட்டமைப்புக்கு உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், உக்ரைனின் கனிம வளங்கள் உலகளவில் குறிப்பிடத்தக்கதாக இருப்பதால், இந்த ஒப்பந்தங்கள் பன்னாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என பரவலாக கருதப்படுகிறது.