அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்தி வரும் மூன்றாவது போர் விமானம் இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்த நாடு வெளியேற்றி வருகிறது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களும் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு அமெரிக்க போர் விமானங்களில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 5ம் தேதி முதல் கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்க போர் விமானத்தில் அமிர்தசரஸ் வந்து இறங்கினர். அதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக 114 இந்தியர்கள் அமெரிக்க போர் விமானத்தில் அமிர்தசரஸ் வந்தனர். இவர்கள் ராணுவ விமானத்தில் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்த நிகழ்வு தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இன்று மூன்றாவது போர் விமானம் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த விமானம் இன்று இரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரவு 10.03 மணியளவில் அமெரிக்க போர் விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த போர் விமானத்தில் மொத்தம் 112 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு வந்துள்ளனர். இவர்களில் ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தைச் சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பைச் சேர்ந்த 31 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 112 பேர் உள்ளனர்.
இதுவரை மூன்று கட்டங்களாக மொத்தம் 332 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதேபோல் அமெரிக்க போர் விமானங்களில் மேலும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.