ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில், 7 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 28 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கோரச் சம்பவம் நேற்று முன்தினம் காலை பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடந்துள்ளது.
காலை பிரார்த்தனைக்காக மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது. 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கான வகுப்பறைகள் அமைந்திருந்த பகுதி இடிந்ததால், சுமார் 35 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்ததும், உள்ளூர் மக்களும் பள்ளி ஊழியர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். போலீசாரும், நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
மீட்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மனோஹர்தானா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் நான்கு குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் எட்டு பேர் ஜலாவர் மாவட்ட மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 3-4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் பெயர்கள் பாயல் (14), பிரியங்கா (14), ஹரிஷ் (8), சோனா பாய் (5), மிதுன் (11), கார்த்திக் (18) மற்றும் மீனா (8) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பள்ளிக் கட்டிடம் கடந்த சில மாதங்களாகவே ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் 1994 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து ராஜ் துறையால் கட்டப்பட்டது என்றும், பழுதுபார்க்கப்படாமல் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், சில மாணவர்கள் கூரையில் விரிசல்களைக் கண்டறிந்து ஆசிரியர்களிடம் எச்சரித்துள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் அதை அலட்சியம் செய்து மாணவர்களை வகுப்பறைக்குத் திரும்பச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் உயிரிழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களை பழுதுபார்க்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையமும் இந்த சம்பவத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதுடன், அதிகாரிகள் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த துயர சம்பவம், நாடு முழுவதும் உள்ள பல அரசுப் பள்ளிகளின் மோசமான நிலையையும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.