புனேயில் இருந்து டெல்லிக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் மீண்டும் புனேவுக்கே அவசரமாகத் திருப்பப்பட்டது. இந்தத் திடீர் சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் மிகுந்த பீதிக்குள்ளாகினர்.
புனேயில் இருந்து நேற்றைய தினம் காலை 9.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தின் காக்பிட்டில் சில எச்சரிக்கை விளக்குகள் எரிந்ததைக் கண்ட விமானிகள், உடனடியாக விமானத்தை புனே விமான நிலையத்திற்கே திருப்ப முடிவு செய்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி, விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி பத்திரமாக இருக்கின்றனர். பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.