இந்தியா – சீனா உறவில் திடீர் திருப்பம்! போர் பதற்றம் தணியுமா?

இந்தியா – சீனா உறவில் திடீர் திருப்பம்! போர் பதற்றம் தணியுமா?

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோரிடையே சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு, உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கடும் மோதலுக்குப் பின் சமாதானப் புறா!

கடந்த 2020-ஆம் ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, இந்தியா – சீனா உறவு கடும் பின்னடைவைச் சந்தித்தது. எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டு, பதற்றம் உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்த சந்திப்பு எல்லையில் நிலவும் அமைதியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சண்டை வேண்டாம், சாமர்த்தியம் போதும்!”

சந்திப்பின்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவும் சீனாவும் பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக மாறக் கூடாது, போட்டியும் மோதலாக மாறக் கூடாது” என நேரடியாகப் பேசியுள்ளார்.

அமெரிக்காவை எதிர்த்து கைகோர்க்கிறதா ஆசியா?

இந்தச் சந்திப்பின் பின்னணியில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் சீனா மற்றும் இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளும் பொருளாதாரப் பாதுகாப்பிற்காக ஒன்றிணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா – சீன எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதும், வர்த்தகத்தை அதிகரிப்பதும் ஆசிய பிராந்தியத்தில் புதிய அரசியல் மாற்றங்களை உருவாக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.