ஸ்காட்லாந்தின் காட்டுப் பகுதியில், தங்களைச் சுயமாக ‘ஆப்பிரிக்கப் பழங்குடியினர்’ என்று கூறிக்கொண்டு வாழ்ந்து வந்த ஒரு குழுவை வெளியேற்றியதைத் தொடர்ந்து, இருவர் குடிவரவு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு தங்களுக்கு ‘கிங்டம் ஆஃப் குபாலா’ (Kingdom of Kubala) என்று பெயரிட்டுள்ளனர். இதில், ‘கிங் அட்டெஹென்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட கோஃபி ஆஃபெ (Kofi Offeh, 36), அவரது மனைவி ‘குயின் நந்தி’ என்று அழைக்கப்பட்ட ஜீன் காஷோ (Jean Gasho, 43), மற்றும் அவர்களின் ‘கைம்பெண்’ (Handmaiden) என்று அழைக்கப்பட்ட கெளரா டெய்லர் (Kaura Taylor, 21) ஆகியோர் அடங்குவர்.
இந்தக் குழு மே மாதம் முதல் ஸ்காட்டிஷ் எல்லைகளில் உள்ள ஜெட்பர்க் (Jedburgh) அருகேயுள்ள காட்டுப் பகுதியில் முகாம் அமைத்து வசித்து வந்தனர். 400 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தை மீட்டெடுப்பதாகக் கூறி, இந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று அவர்கள் உரிமை கோரினர்.
இந்தக் குழு முதலில் ஒரு தனியார் நிலத்தில் குடியேறியிருந்தது. வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் அருகில் இருந்த ஸ்காட்டிஷ் எல்லைகள் கவுன்சிலுக்குச் சொந்தமான மற்றொரு நிலத்திற்கு இடம் மாறினர். நேற்று முன் தினம் ஆரம்பத்தில் அவர்கள் இருந்த நிலத்திற்குத் திரும்பக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்றை தினம் காவல்துறையினர், ஷெரிஃப் அதிகாரிகள் (Sheriff Officers) மற்றும் குடிவரவு அமலாக்க அதிகாரிகள் (Immigration Enforcement) உள்ளிட்ட பிற உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் இந்தக் குழு வெளியேற்றப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, ஒரு கானா நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் அமெரிக்கப் பெண்ணான கெளரா டெய்லர் ஆகியோர் குடிவரவு குற்றச்சாட்டுகளின் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கெளரா டெய்லரின் தாயார் மெல்பா ஒயிட்ஹெட், இந்தக் குழுவை ஒரு ‘வழிபாட்டுக் குழு’ (Cult) என்று முத்திரை குத்தியுள்ளார். தனது மகள் “மூளைச்சலவை” செய்யப்பட்டு ஸ்காட்டிஷ் காட்டில் வாழ வைக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், கெளரா டெய்லர் தனது குடும்பத்தினரின் கவலைகளை நிராகரித்து, தான் இங்கு இருப்பது தனது சிறந்த நலனுக்காகவே என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உள்துறை அலுவலகம் (Home Office) தெரிவித்துள்ளது.