மீண்டும் அச்சத்தை கிளப்பிய ஏர் இந்தியா: ‘ராட்’ கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு!

மீண்டும் அச்சத்தை கிளப்பிய ஏர் இந்தியா:  ‘ராட்’ கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு!

குஜராத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் கோர நினைவுகள் இன்னும் மனதில் நீங்காத நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு அதிர வைக்கும் சம்பவம் ஏர் இந்தியாவின் மற்றொரு விமானத்தில் அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம்  இந்தியாவின் அமிர்தசரஸிலிருந்து பிரிட்டனின் பிரிமிங்காம் நகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்கச் சில நிமிடங்கள் இருந்த நிலையில், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான ‘ராம் ஏர் டர்பைன் (Ram Air Turbine – RAT)’ திடீரெனத் தானாகக் கீழே இறங்கியதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம்.

பொதுவாக இந்த RAT அமைப்பு எப்போது செயல்படும்?

  • விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழக்கும்போது
  • அல்லது மின்சாரம், ஹைட்ராலிக் அமைப்புகள் முழுமையாகச் செயலிழக்கும்போது மட்டுமே.
  • இது, காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி அவசரக்கால மின்சாரத்தை (Emergency Power) உருவாக்கும் ஒரு பாதுகாப்பு கருவி.

இப்படி ஒரு முக்கியமான, அபாயகரமான சூழ்நிலையில் மட்டுமே பயன்படும் ‘ராட்’, விமானம் தரையிறங்கும் கடைசி நொடியில் தானாகவே கீழே இறங்கியதால் விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளாகினர்.

இங்குதான் மிகப்பெரிய அதிர்ச்சி இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத்தில் மிக மோசமான விபத்தில் சிக்கி 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமானத்திலும், விபத்துக்குள்ளாகும் நேரத்தில் இந்த ‘ராம் ஏர் டர்பைன் (RAT)’ கீழே இறங்கி இருந்தது.

அதே பிரிட்டனுக்குச் செல்லும் விமானம்… அதே ‘ராட்’ சிக்கல்… என்ற ஒற்றுமைகள் மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எனினும், நல்வாய்ப்பாக இந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா, தொடர்ந்து இதுபோன்ற பாதுகாப்புச் சிக்கல்களைச் சந்திப்பது, அதன் நற்பெயருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது!

மீண்டும் மீண்டும் நடக்கும் இந்த ‘ராட்’ கோளாறு ஏர் இந்தியாவின் பாதுகாப்புத் தரத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது.