ஆப்கானிஸ்தான் மண்ணில் மீண்டும் ஒரு கொடூரமான பேரழிவு. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாக பலியாகியுள்ளன. உயிர்ப்பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலிபான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த நாடு உதவி கேட்டு கதறி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு, ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவான நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணங்களான குனார், நாங்கர்ஹார் ஆகியவற்றை குலுக்கிப் போட்டது. மரண ஓலம் ஒருபுறம்… மரத்தால் ஆன வீடுகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து மக்களை உயிரோடு புதைத்தன.
ஆரம்பத்தில் 800 பேர் இறந்ததாக தகவல் வந்த நிலையில், இப்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைக் கைகளால் மீட்கும் அவலநிலை. மலைப்பாங்கான பகுதி என்பதால், மீட்புப் பணிகளும் நிவாரண உதவிகளும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றடைவது பெரும் சவாலாக உள்ளது.
தாலிபான் அரசு, சர்வதேச அமைப்புகளிடம் உதவி கேட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு வேண்டிய அளவில் உதவிகள் கிடைக்காமல், உயிர் பிழைத்த மக்களும் பட்டினியாலும் நோய்களாலும் வாடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நவீன உபகரணங்கள் இல்லை. மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.
இந்தியாவும், வேறு சில நாடுகளும் சில நிவாரணப் பொருட்களை அனுப்பி இருந்தாலும், பனிப்பொழிவு காலம் நெருங்குவதால், வீடுகளை இழந்த மக்களின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. இந்த துயரத்திலிருந்து ஆப்கானிஸ்தான் எப்படி மீளப்போகிறது என்பதுதான் உலக நாடுகளின் முன் உள்ள கேள்வி.