பிரிட்டனில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக வெடித்துள்ள போர், அரசாங்கத்தின் புதிய சீர்திருத்தங்களையும் மீறி தீவிரம் அடைந்துள்ளது. அகதிகளைத் தங்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஹோட்டல்களுக்கு வெளியே பல வாரங்களாக நடந்து வரும் போராட்டங்கள், தற்போது பெரும் கலவரங்களாக உருவெடுத்துள்ளன.
லண்டன், பிரிஸ்டல், லிவர்பூல், பர்மிங்காம் என முக்கிய நகரங்கள் அனைத்திலும் போராட்டங்கள் கடந்த வார இறுதியில் உச்சக்கட்டத்தை எட்டின. போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், குதிரைப்படையைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.
சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்களைத் தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஹோட்டல்களைப் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
சமீபத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அகதி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, போராட்டம் இன்னும் கொடூரமாக மாறியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அகதிகளின் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கவும், ஹோட்டல் பயன்பாடுகளைக் குறைக்கவும், நாடு கடத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் அரசு உறுதியளித்துள்ளது.
ஆனால், இந்த வாக்குறுதிகள் வெறும் கண் துடைப்பு நாடகம் என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர். வலதுசாரி கட்சிகள் மற்றும் குடியேற்றவாசிகள் எதிர்ப்பு அமைப்புகள், இந்த அரசாங்க நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், பிரிட்டனில் அமைதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முயன்றாலும், எதிர்ப்புக் குரல்கள் அடங்கவில்லை. பிரிட்டன் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்வி மில்லியன் கணக்கான மக்களின் மனதில் எழுந்துள்ளது.