மசூத் அசாரின் குடும்பமே நாசமா? இந்திய பதிலடியால் பயங்கரவாதிகள் வேரோடு சாய்கின்றனரா?

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-மொஹமட் தலைவன் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு முக்கிய உதவியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது! பயங்கரவாதத்தின் முகமாக திகழ்ந்த மசூத் அசாரின் குடும்பமே இந்திய பதிலடியில் சிதைந்து போனது பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்பது முக்கிய முகாம்களை துல்லியமாக தாக்கியழித்தது. பஹால்காமில் உள்ள சுபான் அல்லா வளாகத்தின் மீதான தாக்குதல், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 26 பேரை கொன்று குவித்த பஹால்காம் படுகொலைக்கு இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கையான ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ இன் ஒரு பகுதியாகும். இதில் பெரும்பாலும் அப்பாவி சுற்றுலாப் பயணிகளே இலக்காகினர்.

இதற்கிடையே, நேற்று எல்லைப் பகுதியில் இந்தியா நடத்திய பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில் அணு ஆயுத பலம் வாய்ந்த இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு வெடித்த இந்த பயங்கர மோதலில், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் குறைந்தது 10 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 48 பேர் படுகாயமடைந்ததாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பது போர் மேகம் இன்னும் விலகவில்லை என்பதையே உணர்த்துகிறது.

மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உதவியாளர்கள் கொல்லப்பட்டது, பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நடவடிக்கையின் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. பஹால்காம் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா ஏற்கனவே சூளுரைத்திருந்தது. இந்த அதிரடி தாக்குதல்கள் மூலம் இந்தியா தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மேலும் பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானுக்கு இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இப்பிராந்தியத்தில் அமைதி திரும்புமா அல்லது போர் மேலும் தீவிரமடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.