‘DD Next Level’ படத்திற்கு சிக்கல்! ‘கோவிந்தா’ பாடல் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக சர்ச்சை – சந்தானம், ஆர்யாவுக்கு ரூ.100 கோடி கேட்டு சட்ட நோட்டீஸ்!
சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில், பிரபல நடிகர் ஆர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘DD Next Level’ தமிழ்த் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவிந்தா’ பாடல் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்படத்தில் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ‘கோவிந்தா’ பாடல் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் குறிப்பிட்ட சில இந்து அமைப்புகள் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளன. இந்தப் பாடல் திருமலை திருப்பதி ஏழுமலையான் மீது அவமரியாதையைக் காட்டுவதாகக் குற்றம்சாட்டி, சர்ச்சைக்குரிய இந்தப் பாடலை உடனடியாகத் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறங்காவலர் வாரிய உறுப்பினரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி (Bhanu Prakash Reddy), இந்தப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம் மற்றும் இந்தப் படத்தைத் தயாரித்துள்ள நிறுவனம் ஆகியோருக்கு சட்ட அறிவிப்பு (legal notice) ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சட்ட அறிவிப்பில், ‘கோவிந்தா’ பாடலால் மத உணர்வுகள் புண்பட்டதற்கும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது. அத்துடன், சர்ச்சைக்குரிய பாடலை உடனடியாகத் திரைப்படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அதில் திட்டவட்டமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சட்ட அறிவிப்பு கிடைத்த 15 நாட்களுக்குள் இது குறித்து முறையான பதில் வரவில்லை என்றால், நடிகர் மற்றும் படத் தயாரிப்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் எழுந்துள்ள இந்த மத உணர்வுப் பாடல் சர்ச்சை, படக்குழுவினரிடையே பெரும் கலக்கத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.