ஒக்ஸ்போர்ட்ஷையர்: ஒக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள முன்னாள் RAF (Royal Air Force) விமானப்படைத் தளத்தின் வளாகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஏராளமான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இன்று மாலை 6.39 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் அவசரகால சேவைகளுக்குக் கிடைத்ததையடுத்து, ஒக்ஸ்போர்ட்ஷையர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையைச் சேர்ந்த பத்து தீயணைப்புக் குழுக்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், உள்ளூர்வாசிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒக்ஸ்போர்ட்ஷையர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “இன்று மாலை 6.39 மணியிலிருந்து பிசெஸ்டர் மோஷன் (Bicester Motion) பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஒரு பாரிய சம்பவத்தில் 10 தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் தற்போது பங்கேற்று வருகின்றன” என்று உறுதிப்படுத்தினார்.
உள்ளூர் கவுன்சிலர் சாம் ஹோலண்ட் (Sam Holland) தெரிவித்ததாவது, இந்தத் தீ விபத்து முன்னாள் விமானத் தளத்தில் அமைந்துள்ள பிசெஸ்டர் மோஷனில் நிகழ்ந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாகன மற்றும் விமானப் போக்குவரத்து மையமாகும். இங்கு கிளாசிக் கார் மறுசீரமைப்பு மற்றும் பொறியியலில் கவனம் செலுத்தும் 50 க்கும் மேற்பட்ட சிறப்பு வணிகங்கள் அமைந்துள்ளன. “நான் தீயை தூரத்திலிருந்து பார்த்தேன். சம்பவ இடத்தில் ஏராளமான அவசரகால வாகனங்கள் இருந்தன. பிசெஸ்டர் மோஷனில் முன்னதாக ஒரு சந்திப்பு நடைபெற்றது” என்றும் அவர் கூறியுள்ளார்.
சவுத் சென்ட்ரல் ஆம்புலன்ஸ் சேவையின் பேச்சாளர் கூறுகையில், “இன்று மாலை 6.57 இற்கு பிசெஸ்டர் மோஷனில் ஒரு பாரிய சம்பவம் தொடர்பான அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தது. பணியாளர்களுக்கு ஆதரவளிக்க வலுவான கட்டமைப்பு ஒன்றை நாங்கள் அனுப்பியுள்ளோம். சம்பவம் தொடர்வதால் தற்போது சம்பவ இடத்திலேயே உள்ளோம்” என்றார்.
பிசெஸ்டர் மோஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பவம் தொடர்பாக, அவசரகால சேவைகள் அழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பங்கேற்றுள்ளனர். உள்ளூர்வாசிகளின் கவலையைப் நாங்கள் பாராட்டுகிறோம். நிறுவனம் அவசரகால சேவைகளுடன் இணைந்து செயல்படுகிறது என்பதையும், பொருத்தமான நேரத்தில் மேலதிக அறிக்கை வெளியிடப்படும் என்பதையும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.