கடந்த வெள்ளிக்கிழமை, கென்டக்கி மாநிலத்தில் 9 வயது சிறுவன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இது கடந்த சில நாட்களாக அமெரிக்காவை தாக்கும் கடும் புயல் மற்றும் பருவமழையால் உயிரிழந்தவர்களில் ஒருவராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆர்கன்சாஸ், டென்னஸி மற்றும் கென்டக்கி மாநிலங்களில் சனிக்கிழமையிலும் கனமழை மற்றும் பலத்த காற்று தொடர்ந்துகொண்டிருந்தது. இது மீட்பு பணிகளை தாமதப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை பள்ளி பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல முயன்ற போது சிறுவன் வெள்ளத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் அவரது உடல் மீட்கப்பட்டது என்று கென்டக்கி மாநிலத்தின் பிராங்க்போர்ட் நகர காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
“இது மிகவும் கொடூரமான சம்பவம். நம்முடைய மாணவர்களில் ஒருவரின் உயிரை இழந்துவிட்டோம்,” என ப்ராங்க்ளின் கவுண்டி பள்ளி மேலாளர் மார்க் காப் செய்தியாளர்களிடம் கூறினார்.
கென்டக்கி மாநில ஆளுநர் ஆண்டி பெஷீர், சிறுவனின் மரணத்தை “கற்பனைக்கூட முடியாத இழப்பாக” விவரித்தார். மேலும், கென்டக்கியில் மேலும் ஒரு பெரியவரும் சனிக்கிழமையன்று உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
“தற்போது, நீர் எங்கும் அபாயகரமாக இருக்கிறது. தயவுசெய்து உங்கள் நெருங்கியவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்,” என்றார் அவர்.
அமெரிக்க தேசிய வானிலை நிலையம் (NWS), இந்த புயல் மற்றும் மழை, ஆர்கன்சாஸ் முதல் வெஸ்டர்ன் பென்சில்வேனியா வரை பரவலாக மழையும் மின்னலுடன் கூடிய புயல்களும் இருக்கக்கூடும் என்றும், சில இடங்களில் 10-20 இன்ச் வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை மாலை வரை, ஆர்கன்சாஸ், டெக்சாஸ், மிசூரி மற்றும் ஒக்லஹோமா மாநிலங்களில் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசிஸிபி, டென்னஸி மற்றும் கென்டக்கி ஆகியவை முந்தைய வாரமே அவசர நிலை அறிவித்திருந்தன.
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் டஜனுக்கணக்கான புயல்கள் பதிவாகியுள்ளன. டென்னஸியில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக CBS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் இதே பகுதிகளில் ஏற்பட்ட புயல், காட்டுத் தீ மற்றும் தூசி புயலால் 40 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.