பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜைர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளனர். அவர் மீதான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தொடர்பான வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் டிரம்ப்பை “எங்கள் கடைசி புகலிடம்” என்று கூறி, பிரேசிலின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரேசிலில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது, “அமெரிக்கா பிரேசிலைக் காப்பாற்றுங்கள்” மற்றும் “டிரம்ப்பை நாங்கள் விரும்புகிறோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டுள்ளனர். இது, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கை “சூனிய வேட்டை” என விவரித்த டிரம்ப், ஏற்கனவே பிரேசிலிய இறக்குமதிகள் மீது 50% வரியை விதித்து, இந்த வழக்கை மேற்பார்வையிடும் பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் டி மோரேஸ் மீது சில தடைகளையும் விதித்துள்ளார்.
பிரேசிலிய அதிபர் லூலா டி சில்வா, தங்கள் நாட்டின் நீதித்துறை சுதந்திரமானது என்றும், அதற்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும் டிரம்பின் தலையீட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், பிரேசில் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, ஆட்சியில் இருந்து விலக மறுத்து, ராணுவப் புரட்சிக்கு சதி செய்ததாக போல்சனாரோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 43 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த பரபரப்பான சூழ்நிலையில், பிரேசிலின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.