நியூயார்க்/பேங்காக்: பல நாட்களாக நீடித்து வந்த பயங்கர எல்லைச் சண்டையை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த கம்போடியாவும் தாய்லாந்தும் ஒப்புக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக, இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கும், 900 ஆண்டுகள் பழமையான பிரியா விகார் (Preah Vihear) இந்துக் கோவிலை ஒட்டியுள்ள எல்லையில் கடுமையான மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்தச் சண்டையில் இரு தரப்பிலும் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், கம்போடியாவின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசரமாகக் கூடியது. நியூயார்க்கில் நடந்த இந்தக் கூட்டத்தில், இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு, உடனடியாக நிறுத்துவதற்கும், இருதரப்பு மூத்த ராணுவ அதிகாரிகளும் சந்தித்துப் பேசி எல்லையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
“எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் தயாராக இருக்கிறோம். தாய்லாந்தும் இதனைச் செய்ய வேண்டும்,” என கம்போடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோர் நம்ஹாங் தெரிவித்தார். இதேபோன்ற கருத்தை தாய்லாந்து தரப்பும் வெளிப்படுத்தியது.
இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராகச் செயல்படவுள்ளார். எல்லையில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டுவதற்கான இந்த முடிவை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.