டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய சலுகைகள் நிறுத்தம்!

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா அரசு வழங்கிய அனைத்து சலுகைகளையும் நிறுத்தி உள்ளது. மேலும் மின்சார வாகனங்களுக்கான தள்ளுபடித் திட்டங்களில் இருந்து டெஸ்லா நிறுவனத்தை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கனடா போக்குவரத்து துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் செவ்வாயன்று (25) தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கோரிக்கையும் தனித்தனியாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்படும் வரை டெஸ்லா நிறுவனத்திற்கு எந்த தள்ளுபடி தொகையும் வழங்கப்படாது என்று கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் அலுவலகம் மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடனான கனடாவின் உறவு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து டெஸ்லா நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆட்டோமொபைல் வரி விரைவில் அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தாலும் ஏப்ரல் 2ஆம் தேதி அமல்படுத்தப்படாது என்று கூறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்திற்கு கனடா வழங்கிய 43 மில்லியன் டாலர் தள்ளுபடி தொகையை கனடா நிறுத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக பிரச்சனைகள் காரணமாக வாடகை டாக்ஸிகள் அல்லது சவாரி பகிர்வு நிறுவனங்கள் டெஸ்லா கார்களை வாங்குவதற்கு ஒன்டாரியோ மாகாணம் நிதிச் சலுகை வழங்குவதை நிறுத்தியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராக, கூட்டாட்சி அரசாங்கம் மற்றும் பட்ஜெட்டை குறைக்க வெள்ளை மாளிகை எடுக்கும் முயற்சிக்கு தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.