ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெரும் பின்னடைவு! காப்புரிமை வழக்கில் ரூ.2 கோடி அபராதம் – அதிர்ச்சி தீர்ப்பு! ‘வீர ராஜா வீர’ பாடல் விவகாரத்தில் நீதிமன்ற அதிரடி!
டெல்லி: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற “வீர ராஜா வீர” பாடல் குறித்த காப்புரிமை வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பு திரையுலகிலும், இசை உலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
2023 ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பாரம்பரிய இசைக்கலைஞர் ஃபையாஸ் வாசிபுதீன் டாகர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “வீர ராஜா வீர” பாடல் தனது தந்தை நசீர் ஃபையாசுதீன் டாகர் மற்றும் மாமா ஜாஹிருதீன் டாகர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட “ஷிவ் ஸ்துதி” என்ற பாரம்பரிய இசையமைப்பில் இருந்து சில கூறுகளை காப்பி அடித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடல், தங்கள் பாரம்பரியப் படைப்பிலிருந்து நேரடியாகத் தழுவப்பட்டதாக டாகர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பாடலை ரஹ்மானும் மெட்ராஸ் டாக்கீஸும் பயன்படுத்தத் தடை விதிக்கவும், அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிற்காக தனக்கு இழப்பீடு வழங்கவும் அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், “வீர ராஜா வீர” பாடல் சில மாற்றங்களுடன் “ஷிவ் ஸ்துதி” இசையமைப்பிலிருந்து பெறப்பட்டது அல்லது அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனத் தீர்ப்பளித்தார். எனவே, நீதிமன்றம் ஏ.ஆர். ரஹ்மான் நீதிமன்றப் பதிவகத்தில் ரூ.2 கோடி தொகையைச் செலுத்தவும், மனுதாரருக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் செலுத்தவும் உத்தரவிட்டது.
ரஹ்மானின் சட்டக் குழு காப்புரிமை மீறலை மறுத்தது. “ஷிவ் ஸ்துதி” பாரம்பரிய துருபத் வகையைச் சேர்ந்தது என்றும், நவீன காப்புரிமைச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்படவில்லை என்றும் அவர்கள் வாதிட்டனர். மேலும், “வீர ராஜா வீர” பாடல் மேற்கத்திய இசை மரபுகளால் ஈர்க்கப்பட்ட 227 தனித்துவமான அடுக்குகளைக் கொண்ட ஒரு அசல் இசையமைப்பு என்றும், இது வழக்கமான ஹிந்துஸ்தானி பாரம்பரிய வடிவங்களிலிருந்து வேறுபட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, இசைத் துறையில் காப்புரிமை மற்றும் பாரம்பரிய இசைப் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு மேல்முறையீடு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.